சேலம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சூரமங்கலம் பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:-
தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், தமிழர் வாழ்வு மலரவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
தமிழகத்தில் அற்புதமான கூட்டணி உருவானதை பார்த்திருப்பீர்கள். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.
தமிழக மக்கள் விரும்பாத கட்சிகள், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி ஊழல் ஆட்சி, இந்த ஆட்சி மீது சி.பி.ஐ. விசாரணை தேவை என்று ஓரிரு வாரங்களுக்கு முன்பாக மனு கொடுத்த கட்சி போன்ற கட்சிகள் இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு ஒன்றாக கிணற்றில் குதிப்பது போன்ற அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்கள்.
தமிழக மக்கள் என்றைக்கு இந்த ஆட்சி முடியும் என்று காத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக தேர்தல் வர இருக்கிறது. நீங்கள் அளிக்கும் உங்களின் ஒவ்வொரு வாக்கின் மூலம் தமிழகத்திற்கு விரோதமான கூட்டணிக்கு முடிவு கட்ட வாய்ப்பு வந்திருக்கிறது.
ஒரு கூட்டணி பண மூட்டையோடு வரும். மற்றொரு கூட்டணி கட்சியின் பலத்தைக் காட்டுகிறேன் என்று வரும். அவர்கள் ஆண்ட கட்சி, மத்தியில் 16 வருடங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்திற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்து உங்களின் வாக்குகளை வீணடிக்காமல், தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்திட, தமிழகம் தலைநிமிர்ந்திட, தன்னிறைவு பெற்றிடும் மாநிலமாக திகழ்ந்திட குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த கூடாது, தமிழக விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா.
ஆனால் அவரது பெயரை சொல்லிக் கொண்டு தற்போது ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் காலில் விழுந்து ஏவல் அரசாக மாறி விட்டது.
ஏற்றி விட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தனது பக்கம் இழுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அவர் ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக அல்ல. இதனை சேலம் மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொண்டு வரும். தமிழர் வாழ்வு மலர நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளன. வரப்போகின்ற தேர்தலுடன் முடியப் போகிற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இடுப்பில் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு எல்லோரும் கிணற்றுக்குள் குதிப்பதுபோல கூட்டணி அமைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு பலரையும் அழைக்கிறார்கள். அந்த கூட்டணிதான் எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
தே.மு.தி.க. எங்களுடன் கூட்டணிக்கு பேசவில்லை. நாங்களும் அவர்களுடன் பேசவில்லை. வைகோ வயதில் பெரியவர். நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அதனால் அவரைப்பற்றி பதில் சொல்ல நான் விரும்பவில்லை.
எங்களுக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும்.
கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் மனோஜ் முன்ஜாமீனை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதில் இருந்தே அவர் மடியில் கனம் உள்ளது தெளிவாகிறது. அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுகிறார். உண்மை எல்லாம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.
இவ்வாறு தினகரன் கூறினார்.