கும்பகோணம், டிச. 22 –

கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.

இதனையடுத்து இந்த சர்க்கரை ஆலையை கால்ஸ் டிஸ்லரிஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஏலத்தில் எடுத்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு அரவைக்கான நிலுவைத் தொகை ரூ.100 கோடியையும், விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.300 கோடி கடனையும் உடனடியாக திருப்பி வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக பொறுப்பு எடுத்துக் கொண்ட கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் கரும்புக்கான நிலுவைத் தொகையில் 57 சதவீதத்தை மட்டும் எங்களால் தர இயலும் என்றும், பல்வேறு வங்கிகளில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கடந்த 21 நாட்களாக தங்கள் வீடு, மனைவி, மக்களை விட்டு விட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமையல் செய்து உண்டு, உறங்கி போராடி வருகின்றனர்.

தற்போது 21வது நாள் போராட்டமாக கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசை கண்டித்தும், முன்னாள் கரும்பு ஆலை நிர்வாகங்களை கண்டித்து கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  தமிழ்த் தேசிய பேரியிக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, இங்குள்ள விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்களுடைய நிலத்தின் மீது கடன் வாங்கியது திருட்டு, மோசடி குற்றமெனவும், இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும், மேலும்,

இங்கு போராடும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். இந்த ஆலைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை, பாதிக்கப்பட்ட விவசாயிகளே கையகப்படுத்தி தாமாக பிரித்து கொண்டு சாகுபடி செய்வதை, அடுத்த போராட்டமாக அறிவிக்க வேண்டும்.

இங்கு அமைதியாக போராடும் விவசாயிகள் மீது வழக்கு பதிந்துள்ளதாக கூறியுள்ளார்கள். இந்த வழக்குகள் அனைத்தையும், ஆலை உரிமையாளர், சர்க்கரை அதிகாரிகள் மீது பதிவு செய்ய வேண்டும். மேலும் காவல்துறையினர் தானாக வழக்கு பதிவு செய்ய வில்லை, எனவும் சென்னையிலுள்ள சூத்தரதாரிகளால் அறிவிக்கப்படுகிறது என அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் இங்கு போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். எனவும் இல்லை என்றால் தமிழகத்திலுள்ள விவசாயிகளை, மக்களை, ஜனநாயக சக்திகளை ஒன்றி திரட்டி,  போராட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த போராட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here