கும்பகோணம், ஜூன். 20 –
கும்பகோணத்தில் கோடை விடுமுறை நிறைவுப் பெற்று சமீபத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் அழைத்து செல்லப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து இன்று மாலை மேம்பாலம் அருகே போக்குவரத்து ஆய்வாளர் சரவண குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்கள் தடுத்து நிறுத்தியதுடன் அந்தந்த வாகனங்களில் சென்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் இது போல் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை அழைத்துச் சென்றால் விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து காவல்துறையினர் ஆட்டோக்களை அனுப்பி வைத்தனர்.