கும்பகோணம், ஜூன். 20 –

கும்பகோணத்தில் தனியார் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் மாணவர்களான எ.அஸ்வின், பி.ராகுல்,  மற்றும் எஸ்.அருண் ஆகியோர் இணைந்து பேராசிரியர் மு.தியாகராஜன் வழிகாட்டுதலின்படி பூகம்பத்தின் போது உயிர்காக்கும் புதிய படுக்கை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இயற்கை பேரிடரான பூகம்பம் எற்படும் போது மக்களுக்கு பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர் சேதத்தை விளைவிக்கிறது. அதனை மனதில் கொண்டு மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்த நவீன படுக்கையானது பூகம்பத்தை துல்லியமாகவும், மிக விரைவாகவும் கண்டறிந்து தானாகவே படுக்கையில் படுத்து இருப்பவரை உள்வாங்கிக் கொண்டு மூடிக்கொள்ளும். அவர்களுக்கு  மூன்று தினங்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தண்ணீரை வழங்கி அவர்களின் உயிரை காக்கிறது.

மேலும், இக்கருவியானது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசிகளால் பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களின் சரியான இடத்தை தெரிவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக பூகம்ப இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்க முடியும்.

இந்த புதிய கருவிகளுடன் கூடிய படுக்கையை கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர்  சேகர் பார்வையிட்டு பாராட்டினார். இக்கருவியானது மக்களின் உயிரை பாதுகாக்க மிகவும் பயன்படும் என்று கூறினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கல்லூரியின் வளாகத்தில் தீயணைப்புத்துறையினர் கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ விபத்தின் போது தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளையும், ஒரு இடத்தில் தீ பற்றி கொண்ட போது தீயணைப்புதுறையினர் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை செய்வித்தும், உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் அவர்களை கையாளும் முறையும், அவர்களுக்கு முதல் உதவி செய்வது குறித்து, செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here