புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சென்ற விமானப்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பலாகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
12 விமானங்களில் சென்று சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசியதில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது. சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடமும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கியுள்ளார்.
இதையடுத்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல் பாகிஸ்தானிலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.