பொன்னேரி, ஏப். 17 –
பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் இன்று புதிய கிணறு பொன்னேரி எம். எல் .ஏ .துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேவுள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமம் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கிராமத்தை சுற்றிலும் வெள்ள நீர் புகுந்து கிராமம் துண்டிக்கப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீருக்கு கஷ்டப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரடியாக கிராமத்திற்கு சென்று உடனடியாக டிராக்டர்கள் மூலம் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தும், மேலும் தற்காலிக குழாய் அமைத்து அதன் மூலமும் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்தார்.
மேலும் சுவையான குடிநீர் கிடைக்கும் வகையில் கிணறு ஒன்றை தனது சொந்த செலவில் அமைத்து அதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து குடிநீர் வினியோகத்தை துவக்கி வைத்தார். இதற்காக நடந்த நிகழ்ச்சியில் ஆண்டார்மடம் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பாய் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். அப்போது கிராம மக்கள் அவருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது கடப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுரேஷ், காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மீனவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, பொன்னேரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயசீலன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுதாகர், மற்றும் திமுக நிர்வாகிகள் பழவை ஏசுராஜன், எம்.ஜி,ஆண்டார்மடம் கிராம நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.