திருவாரூர், செப். 08 –
டாஸ்மாக்கிற்கு புதியாத சுமைத்தூக்கும் தொழிலாளர்களை நியமிப்பதைக் கண்டித்து பழைய சுமைதூக்கும் தொழிலாளர் ரஞ்சித் என்ற நபர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் குடோனில் கடந்த 17 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு பதிலாக புதிதாக சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் நியமிக்க ஆளும் கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம், வருவாய் துறை சார்பில் தொழிலாளர்களிடம் சமரச கூட்டம் நடைபெற்றது. ஆனால் அப்பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில், திருவாரூர் விஜயபுரத்தை சேர்ந்த டாஸ்மாக் சுமைத் தூக்கும் தொழிலாளர் ரஞ்சித், இனி வேலையில்லாமல் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து ரஞ்சித் பணிக்கு சென்ற போது, அவரை டாஸ்மாக் நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதில் மனமுடைந்த அவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி: துரைராஜ் – சுமை தூக்கும் தொழிலாளர்



















