திருவாரூர், டிச. 30 –
திருவாரூர் மாவட்டம் சாரநத்தம் பூனா இருப்பு ஊராட்சியில் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை.. நிறைவேற்ற கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார் .
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள்..
இந்த நிகழ்ச்சியில் பல ஆண்டு காலமாக சாரநத்தம் ஊராட்சி செல்லும் சாலையில் உள்ள சாறு வாய்க்கால் வடிகாலின் இடிந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டித் தர வேண்டும். எனவும், சாரநத்தம் மயானத்திற்கு செல்லும் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளதை புதிதாக அமைத்து தர வேண்டும். மேலும், ஆலங்குடி வேடம்பூர் சாலையில் சாறு வாய்க்காலில் மூன்று குழாய்கள், மற்றும் தெற்கே செல்லும் மண் சாலைகளையும், மாணிக்கமங்கலம் ஊராட்சி சிவபுரி கல்விக்குடி வழியாக வரும் சாலையை இணைத்து இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும், எனவும்,
பூனாயிருப்பு ஊராட்சி மானாநல்லூர் காலனிதெரு, புதுதெரு ஆகிய பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் உண்ணாவிரத போராட்டமானது தொடர்ந்து நடைபெற்றது.




















