ஆவடி, ஆக. 17 –
ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் இத் தீயப்பழக்கத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாகி விடக் கூடாதெனவும் அறிவுறுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தினால் எவ்விதமான நோய்களால் மாணவர்கள் இளைஞர்கள் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என்பதுக் குறித்து நாடகம், மற்றும் கிராமிய பாட்டு, நடனம், ஆகியவற்றின் மூலமாக பொதுமக்களிடையே போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், ஆவடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த போதை பொருள் தீமை குறித்த நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு ஏற்பாடு செய்திருந்த காவல்துறையினருக்கு தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.