பெரியபாளையம், மார்ச். 18 –
பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து கிராம பொதுமக்கள் இக்கோவில் சீரமைப்புப்பணிகளை மேற்கொண்டு இன்று காலை மகா கும்பாபிஷேகம் செய்தனர். இக் கும்பாபிஷேகம் முன்னிட்டு கடந்த புதன்கிழமை மாலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மூலவர், அம்பாள், விமான கோபுரங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது பின்னர் மூலவருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னிகைப்பேர் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மிக சிறப்பாக செய்திருந்தனர்.






















