கும்பகோணம்,மார்ச். 18 –
கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழாவில் வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு கல்ளாலான கருடன் மூலஸ்தானத்தில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார்.
இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது ஆண்டுக்கு இருமுறை பங்குனி மார்கழி பிரம்மோற்சவங்களில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக கல் கருட சேவை நடைபெற்று வருகிறது. இவ்வாண்டுக்கான பங்குனி தேர்விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது தினமும் காலை மாலை என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை வஞ்சுளவல்லி தாயாருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள் பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.






















