திருவாரூர், ஆக. 08 –
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கலைஞரின் சாதனைகள் என்ற தலைப்பில் திருவாரூர் கலைஞர் கோட்டத்தில், ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதனை அங்கு திரளாக வந்திருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5 வது நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழகம் அடைந்த வளர்ச்சிகள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழகத்திற்காக ஆற்றிய தொண்டுகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து சாதனை விளக்க ஒளிப்படம் ஒளிபரப்பப்பட்டது.
குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றி, உலக தலை சிறந்த நகரங்களில் ஒன்றாக சென்னையை மாற்றியது குறித்து சிறப்பாக ஒளிபரப்பப்பட்டது.
அதனை காட்டூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், கலைஞர் கோட்டத்தை காண வந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்த வந்த திமுகவினர் என 500 க்கும் மேற்பட்டோர் பார்த்து கலைஞரின் வாழ்நாள் சாதனைகளை அறிந்துக்கொண்டனர்.
மேலும் திருவாரூர் கும்பகோணம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானவர்கள் அப்படத்தினைப் பார்த்திட தொடர்ந்து வந்துக்கொண்டேயிருந்தனர்.
கலைஞரின் நினைவு நாளில், அவரின் வாழ்நாள் சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக, அவ்ஒளிப்பட தொகுப்பை சிறப்பாக காட்சிப் படுத்தியதற்காக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தனபால் மற்றும் அலுவலர்கள் ராஜ்மோகன், ஜம்பு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்
























