பெரியபாளையம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்…
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் கரங்களால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் உற்சவர் ராமருக்கு சிறப்பு பூஜைகளும், மற்றும் யாக குண்டம் அமைத்து உச்சிஷ்ட கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், சந்தன கோபாலகிருஷ்ணன் ஹோமம், தனகரஷண குபேர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் சிறப்பு யாகசாலை பூஜை முடிந்த பின்னர் கலசங்களை அடங்கிய புனித நீரை மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வளம் வந்து மூலவர் ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு வாசனை திரவியங்களால் பாபாவிற்கு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.




















