புதுச்சேரி, ஏப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பிரச்சார வாகனத்தில் வந்து பிரச்சாரம் செய்த திமுக மாணவர் அணியினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமாமேதை அம்பேத்கரின் 144 வது பிறந்தநாள் புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது, இதனிடையே விக்டர் சிம்மோனியல் வீதியில் உள்ள சட்டப்பேரவை எதிரே அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் அவரது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் கட்சி கொடிகளுடன் உறுதி மொழி ஏற்று கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சட்டபேரவை அருகே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பிரசார வாகனத்தில் வந்த திமுக மாணவர் அணியினர், நாம் தமிழர் கட்சியினர் நிற்கும் இடம் அருகே வந்து இந்திய கூட்டணி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.

அதனால் நாம் தமிழர் கட்சியினர், இங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளோம். இங்கு வாக்கு சேகரிப்பது சரியல்ல என திமுகவினரிடம் முறையிட்டனர். இதை சற்றும் பொருட்படுத்தாத திமுகவினர் தொடர் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதில் ஆத்திரம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் திமுக நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாததில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவிற்கு ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தனர்.

இதனை கண்ட அங்கு பாதுக்காப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கு இருந்து கலைந்துச் செல்லும்படி அறுவுறுத்தினார்கள். இரு கட்சியினரிடையே ஏற்பட்ட இந்த கடுமையான வாக்குவாதம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here