புதுடெல்லி:
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், வக்கீல்கள் பாலாஜி ஸ்ரீனிவாசன், கவுதம் குமார், பாபு முருகவேல் ஆகியோர் ஆஜரானார்கள்.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 8-ம் தேதி முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பரபரப்பாக பேசப்படும் இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது செல்லும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.