திருவாரூர், நவ. 29 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்லக்கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றினை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக அங்கு ஏற்கனவே பழுதடைந்திருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடையினை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அப்பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேலே மிகவும் தாழ்வான நிலையில் மின்சார கம்பி சென்று கொண்டிருந்தது. நேற்று மதியம் பயணிகள் நிழல் குடை கட்டிடத்தின் மீது நின்றுக்கொண்டு பணியின் இறுதிக் கட்ட கட்டிட பணியில் ஈடுப்பட்டிருந்த தந்தையையிழந்த 18 வயது மதிக்கத் தக்க வினோத்குமார் என்ற பெருங்குடி பகுதியை சேர்ந்த இளைஞனின் கைகள் மிகவும் தாழ்வாக சென்ற மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடைய உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தகவலறிந்து அரித்துவார் மங்கலம் காவல்துறையினர் அச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இது குறித்து வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபொழுது.. நாங்கள் ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மின் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டோம் என தெரிவித்தனர்.
மேலும் ஆலங்குடி உதவி மின் நிலைய உதவி பொறியாளரிடம் கேட்ட பொழுது எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை அப்படி வந்திருந்தால் நாங்கள் மின் இணைப்பைத் துண்டித்திருப்போம் என தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் வலங்கைமான் ஒன்றிய அலுவலக அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் அவ் இளைஞன் உயிரிழந்தார் என குற்றம் சாட்டுகின்றனர்.




















