புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
அவ்வகையில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மீரில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது நேற்று ஸ்ரீநகரில் 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று ஜம்முவில் தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய கூட்டத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் அலி முகமது சாகர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடும்படி தேர்தல் ஆணையத்திடம் அலி முகமது சாகர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.