புதுச்சேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக – பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு மணவெளி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவளக்குப்பம் – பூராணங்குப்பம் சந்திப்பு அருகில் முதலமைச்சரின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக – பாமகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு கட்சி தொண்டர்களையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், அவர்கள் சமாதானம் ஆகாமல் பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முகம் சுழித்தபடி சென்றனர்.





















