திருவாரூர், மார்ச். 05 –
தமிழ்நாடு அரசு, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேலும் பாரம்பரிய உயர்தர நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. அதற்கான முன்னேடுப்பாக வேளாண்மைத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பாரம்பரிய இயற்கை விவசாயம் மற்றும் உள்ளூர் உயர் தர நெல் ரகங்களை விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதனை அறிவுறுத்தி வருகிறது.
அம் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள பாரத் கல்வியியல் கல்லூரியில் இன்று தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு இயற்கை உணவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணைந்து பாரம்பரிய உயர்தர உள்ளூர் இரகங்களின் உற்பத்தி பொருட்காட்சி விழாவை நடத்தியது.
இவ்விழாவினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி என்பது ஒரு சிறப்பான கண்காட்சி ஆகும். மரபுசார் என்றாலே காலம் காலமாக நமது பூமியில் விளைவித்த பயிர்களை பயிரிட வைக்க வேண்டும் என்பதும், உலகம் வளர்ந்து கொண்டிருக்கும் அளவிற்கு நவீன அளவில் தொழில்நுட்பத்தை இணைத்து பயிரிட வேண்டும் என்பதும் ஆகும்.
மேலும், மரபு சார்ந்த நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த கண்காட்சி நடைபெறுகிறது எனவே வருங்காலங்களில் வேளாண் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மரபு சார்ந்த விதைகளை குறுகிய காலத்தில் விஞ்ஞானத்தையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து உணவு பாதுகாப்பினை ஏற்படுத்துவதுடன் தங்கள் வளங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் எனவும் இப்பொருட் காட்சி வாயிலாக விவசாய பெருமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் பாரம்பரிய கருப்பு கவுனி, கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா ,கிச்சிலி சம்பா , தூய மல்லி உள்ளிட்ட நெல் வகைகளும் பஞ்சகாவியம் ,பட்டு வளர்ச்சி, நாட்டு காய்கறி விதைகள், செக்கு எண்ணெய்கள் , சிறுதானியங்கள் , இயற்கை உரம் முதலானவை காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இவ்விழா மாணவர்களின் கும்மியடிபாட்டு, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்கள் பாரம்பரிய சத்து மிகுந்த நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு வகைகளையும் காட்சிப் படுத்தியிருந்தது அனைவரையும் ஆர்வத்துடன் காணச் செய்தது.






















