ராமநாதபுரம், அக். 1- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாஸ் கேட்டரிங் கல்லுாரி அறம் விழுதுகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்திய தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் விழிப்புணர்வை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி அறம் விழுதுகள் அறக்கட்டளை இணைந்து பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ஊட்டச்சத்து வகைகளின் கண்காட்சி ஸ்டால் அமைந்த முகாமை வைத்திருந்தனர்.
இந்த உணவு கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த உணவு கண்காட்சி முகாமில் கேழ்வரகு கூழ், ராகி கூழ், கேழ்வரகு கொழுக்கட்டை, சிறுதானிய தோசைகள், கேரட் ஜூஸ், காய்ச்சலை கட்டுப்படுத்தும் கசாயங்கள் என ஏராளமான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் பழரச வகைகள் வைக்கப்பட்டிருந்தன. இயற்கையான உணவுகள் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியத்துடன் பக்கவிளைவுகள் ஏதுமின்றி பல ஆண்டுகள் நோய் நொடியின்றி வாழ வழிசெய்வது குறித்து மாணவர்கள் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர். பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் இயற்கை உணவு வகைகளை ரசித்து பார்த்து அவைகள் தயார் செய்யும் விதங்களையும் கேட்டு சென்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறம் விழுதுகள் தலைவர் முகம்மது சலாஹூதீன் தலைமையில் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முகாமை துவக்கி வைத்து கண்காட்சியில் இருந்த உணவுகளை ரசித்து ருசித்து பார்த்துவிட்டு தயார் செய்த மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.