புதுப்பாக்கம், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிதிலமடைந்துக் கிடக்கும் அச்சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி அக்கிராமத்தில் உள்ள பெண்கள் அருமந்தை – ஞாயிறு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மேலும் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அச்சாலை அமைப்பதற்காக பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டு சரளை கற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையில் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைத் தொடர்ந்து இருந்து வருவதாகவும், மேலும் அச்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் கற்களில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்களில் காயமடைந்து வருவதாக அப்பகுதிப் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் மாணவர்கள், மருந்துவமனை செல்லும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பினரும் மோசமான நிலையில் உள்ள அச் சாலையால் தினந்தோறும் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அச்சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை அமைக்கும் பணிகளை நாளையே தொடங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து வெகுநேரமாக {ஆலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.






















