திருச்சி:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த சூழலில் தொகுதி பங்கீடு குறித்து எந்த கருத்தும் கூற இயலாது. இதே போல திருச்சியில் போட்டியிடுவேனா? என்பது குறித்தும் கூற முடியாது.
மதவாத சக்திகள் திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்து செயல்பட்டு வருவதால் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். கலாச்சார படையெடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழர் நலன் மற்றும் தமிழக நலனை கருத்தில் கொண்டும் திராவிட இயக்கத்தை காக்க வேண்டியது அவசியமானது.
தமிழர்களின் தன்மானத்துக்கு அறை கூவல் விடும் சூழலில் தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருந்து செயல்படுவோம் என ஓராண்டுக்கு முன்பே ம.தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது.
ஸ்டெர்லைட், கூடங்குளம், மணல் கொள்ளை, நியூட்ரினோ உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு திட்டங்களுக்கு எதிராக போராடிய முகிலன், போலீசாரால் கடத்தப்பட்டாரா? போலீசார் உதவியுடன் கூலிப்படையினர் கடத்தி சென்றனரா? எனத்தெரியவில்லை. அவரது உயிருக்கும் ஆபத்திருக்கலாம் என அஞ்சுகிறோம்.
முகிலன் விவகாரத்தில் எது நடந்தாலும் அதற்கு தமிழக காவல் துறையும் தமிழக அரசும்தான் பொறுப்பு. ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் இருப்பதாக கடந்த 15-ந்தேதி அறிவித்த நிலையில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
முகிலனை மறைத்து வைத்திருந்தாலோ, துன்புறுத்தினாலோ? அதனை கைவிட்டு உடனடியாக நீதிமன்றம் முன் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.