பெரம்பலூர், ஏப். 05 –

பெரம்பலூர் அருகே உள்ள வேப்பூரில் பட்டியல் பெண்கள்  நேற்று வேப்பூர் பகுதியில் தங்களுக்கு 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்கவில்லை என்று திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் மூன்று மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் இரண்டு வருடத்திற்கு மேலாக இருந்து வருகிறார்கள் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எந்த நிதி உதவியும் வழங்காததால் எங்களால் எந்த பணியும் ஊராட்சிகளில் செய்ய முடியவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துவிட்டது இப்போதும் உள்ளாட்சி பதவிகளில் இருப்பவர்கள் தங்களுக்கு போதுமான அரசு நிதி உதவி வழங்கவில்லை என்றுதான் தெரிவிக்கின்றனர். தற்போது ஏப்ரல் மாதம் தான் நடந்து வருகின்றது, அதற்குள்ளே பல்வேறு கிராமங்களில் தண்ணீர் பிரச்சனை தலையெடுத்து ஆடுகிறது, அந்த வகையில் ஓளைபாடி  ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குறிப்பாக பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வரவே இல்லை, இப்பிரச்சினைக் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்  தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த பலனும் இல்லை என்பதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினார்கள்.

அதன் பிறகு ஊரக வளர்ச்சித் துறையினரும் காவல்துறையினரும் விரைவில் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை டேங்கர் லாரியில் தண்ணீர் வசதி செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நேற்று போராட்டம் நடத்திய வேப்பூர் கிராமம்  தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எஸ். எஸ். சிவசங்கரின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here