தஞ்சாவூர், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய வழிப்பாதை இல்லை என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்படியே எடுத்தச் செல்ல வேண்டுமெனில் வயல் வரப்பு வழியாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளத்தாகவும் மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்ற முதியவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.  அவரது உடலை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால், மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள கருவேல மரம், புதர்களை கிராம மக்கள் சேர்ந்து அகற்றினர். பின்னர் உளுந்து, கடலை, எள் தெளிக்கப்பட்ட விளைநிலங்கள் வழியாக உடலை தூக்கிச் சென்று தகனம் செய்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை இல்லாததால், ஒவ்வொரு முறையும் இங்கு மண்டியுள்ள புதர்களையும், கருவேல மரங்களையும் அகற்றி, பிறகு விளைநிலங்கள் வழியாக தூக்கிச் செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. விளைநிலங்களில் உடலை எடுத்துச் செல்லும்போது அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் நில உரிமையாளர்களுக்கும் – உடலை எடுத்துச் செல்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு கிராம மக்களின் ஒற்றுமை பாதிக்கப் படுகிறது. எனவே அதிகாரிகள் இனியும் அலட்சியம் செய்யாமல் இப்பகுதியில் உரிய பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் உள்ளூர், ஒன்றியம், மாவட்டம், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராசு நாட்டாமை பாச்சூர், பழனி முத்து-பாச்சூர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here