மயிலாடுதுறை, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை, தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுவது மாசி மாதம். மேலும் அம் மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும், முன்னோர்கள் சொல்வார்கள்.
மேலும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம் எனக்கூறப்படுகிறது. அந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர். மாசி மகத்தன்று தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்யும் போது பித்துருக்கள் தோஷம் நீங்கி முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது அம்மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அதன்படி நேற்று மயிலாடுதுறையில் புகழ் பெற்ற புனித காவிரி ஆற்றின் துலா கட்ட தீர்த்த படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் புனித புஷ்கர தொட்டியில் மின் மோட்டார் மூலம் விடப்பட்ட சிறிய அளவிலான தண்ணீரில் பொதுமக்கள் நீராடி வழிபாடு செய்தனர்.