சென்னை, ஜூன். 02 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.6.2022) சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடத்தை பொதுமக்களின் பார்வைக்காக அர்ப்பணித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மாநகர மேயராக பதவி வகித்தப் போது, சென்னை மாநகரை சர்வதேச நகரங்களுக்கு இணையாக கட்டமைக்க சிங்கார சென்னை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மேம்பாலங்கள், சிறிய பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், கடற்கரைகள் அழகுபடுத்துதல், சாலை விரிவாக்கம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை மாநகராட்சியுடன் 2011-ஆம் ஆண்டு 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகர எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கி.மீ. பரப்பளவுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சரியான முன்னேற்றம் இல்லாததால் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தவும் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 என்னும் புதிய திட்டம் இவ்வரசால் தீட்டப்பட்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை புதுப்பித்து பராமரித்தல், மாநகரின் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் புதிய பூங்காக்களை ஏற்படுத்துதல் மற்றும் சாலையோரங்களிலும், சாலை மைய தடுப்புகளிலும் பசுமைப்படுத்துதல், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் செங்குத்துப் பூங்கா மற்றும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரித்தல், கடற்கரை பகுதிகளை மேம்படுத்தி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் நவீனப்படுத்துதல், நீர்நிலைகளை புனரமைத்து மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த விளையாட்டுத்திடல் அமைத்தல், பொதுக் கழிப்பிடங்களை புதுப்பித்து பராமரித்தல் போன்ற பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2021-22ம் ஆண்டில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.409.19 கோடி மதிப்பில் 183 திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் பாரம்பரியமிக்க புராதன கட்டடமான பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நிறம் மாறும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படை வண்ணங்களான சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று நிறங்களை சேர்த்து அவற்றின் மூலம் பல வண்ணங்களை உருவாக்கி தினந்தோறும் ஒளிரூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணி நிறைவேற்றப்பட்டதன் மூலம், குடியரசு தினம், சுதந்திர தினங்களில் ரிப்பன் கட்டட முகப்பானது மூவர்ண விளக்குகளாலும், உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று (Breast Cancer Awareness) இளஞ்சிவப்பு நிறத்திலும், உலக தண்டுவட மரப்பு நோய் விழிப்புணர்வு தினத்தன்று (World Multiple Sclerosis Day) ஆரஞ்சு நிறத்திலும், உலக மனநலிவு நோய் விழிப்புணர்வு தினத்தன்று (World Down Syndrome Day) நீல நிறத்திலும் ஒளிரூட்டப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் நகரங்களை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் மாதந்தோறும் வாரத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் மாதந்தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரிப்பன் கட்டடமானது வெள்ளை நிற விளக்குகளால் ஒளிரூட்டப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஓர் ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மு. மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்.சிவ தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மாமன்ற நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




















