திருவள்ளூர், மார்ச்.25 –
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 – 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை வெளியிட்டு அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆட்சித்தலைவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் 11 ஆம் தேதி வரை நடைப்பெறும் புத்தக கண்காட்சியானது, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்துகிறது.
மேலும் சென்னையில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி என்பது ஏறக்குறைய 40 ஆண்டு காலமாக நடைப்பெற்று வருகிறது. இக்கண்காட்சியில் நமது மாவட்டத்தை சேர்ந்த வாசகர்கள் சென்னை வரை சென்று புத்தகம் வாங்குவதற்கான வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை, எனவே நமது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்கள் மற்றும் மக்களுக்கும் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த புத்தக கண்காட்சி நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.
இந்த புத்தக திருவிழா என்பது ஏப்ரல் 1 – 2022 அன்று ஆரம்பித்து ஏப் 11 -2022 ஆம் தேதி வரை மட்டும் நடைப்பெறும். அதே நேரத்தில் ஏப் 1 ஆம் தேதி துவக்க நாளாக மட்டும்தான் இருக்கும். ஏப் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு காலை 11 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மாலை 4 மணி வரையில் நடைப்பெறும், பின்னர் 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை தமிழ்நாட்டிலயே மிக புகழ்பெற்ற பேச்சாளர்களை நம் மாவட்டத்திற்கு வரவழைத்து அவர்களை கருத்துரையாற்றுமாறும், பட்டிமன்றங்கள் , பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் இதனை பெரிய வாய்ப்பாக கருதி இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
மேலும் இது முதலாவது புத்தக திருவிழா என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விசயம் இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளின் அடிப்படையில் ஒரு வாரம் முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்தவுடன் முதன் முதலாக நம் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த புத்தக திருவிழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமானதாகும் என்று குறிப்பிட்டார்.
இந்த புத்தக கண்காட்சி திருவிழாவில் மொத்தம் 100 அரங்குகளும், 50 ஆயிரம் தலைப்புகள், லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெறவுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பு பொருள் குறித்து உரையாற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வித புத்தகங்களுக்கும் புத்தக விலையில் இருந்து 10 சதவிகிதம் தள்ளுபடி செய்து வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் இப்புத்தக கண்காட்சி ஒரு உதாரணமாக இருக்கும். அரசு அலுவலர்கள் இடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக அதற்காக திட்டமிட்டு, இப்புத்தக கண்காட்சி திருவிழா தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி புத்தக திருவிழாவினை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்திலும் புத்தக திருவிழா நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். இப்புத்தக கண்காட்சியை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் அறிவுரையின்படி இல்லம் தேடி கல்வி என்பது சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடைப்பெற்று வருகிறது. சென்னையில் நடைப்பெற்ற புத்தக கண்காட்சியில் இல்லம் தேடி கல்வியின் தனிப்பட்ட புத்தக காட்சி அனைவரையும் பெரிதளவில் கவர்ந்தது. அதன்படி இல்லாம் தேடி கல்வியின் தனிப்பட்ட புத்தக காட்சி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை இப்புத்தக கண்காட்சியில் எடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு பாடநூல் கழகம் தனிபுத்தக கண்காட்சி இடம் பெற செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அனைத்து போட்டி தேர்விற்கான அனைத்து புத்தகங்களும் இப்புத்தக கண்காட்சியில் இடம் பெற உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் வகையிலான புத்தகங்கள் இப்புத்தக கண்காட்சியில் இடம் பெறவுள்ளது. வாசிப்பு பழக்கம் என்பது பெரிதளவில் குறைந்து வரும் தருணத்தில் இந்த புத்தக கண்காட்சி வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும். என நம்புவதாக ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இப்புத்தக கண்காட்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அந்நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியாதர்ஷிணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், மற்றும் பதிப்பாளர்கள் ( BAPASI ) சங்க செயலாளர் எஸ்.கே.முருகன், BAPASI குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.




















