திருநின்றவூர், மார்ச். 11 –

திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தபடும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதி மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை அடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி திடக்கழிவு மேலாண்மைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக பிரகாஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள உர குடிலினை நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு சேகரிக்கப்படும் குப்பையின் அளவு, தரம் பிரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ஏதுவாக உர குடிலினை விசாலமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். மேலும், விரைவில் குப்பைகளை மறு சுழற்சி செய்து உரமாக மாற்றிட கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நகர மன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் திருநின்றவூர் நகரமன்ற தலைவர் உஷா ராணி மற்றும் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நீதியரசர் ஜோதிமணி வார்டு உறுப்பினர்களிடம் அவர்கள் பகுதியில் நிலவும் திடக்கழிவு மேலாண்மை குறித்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருநின்றவூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசுகையில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப் பட வேண்டும் என அரசுகளிடம் வலியுறுத்துவேன், தற்போது மேற்கொண்டுவரும் ஆய்வின் முடிவில் அரசுக்கு அறிக்கை அளித்து அதனை தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

விரைவாக திருநின்றவூரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த பட்டால் கழிவு நீர் தேக்கம் தடுக்கப்படும் என அறிவுறுத்தியவர் அதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் தூய்மை பணியை செவ்வனே மேற்கொள்வோம் எனவும் திடக்கழிவு மேலாண்மையில் தமிழகத்தில் முதன்மை நகராட்சியாக திருநின்றவூர் நகராட்சியை உயர்த்துவோம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு மற்றும் திருநின்றவூர் கூடுதல் சுகாதார ஆய்வாளர் ஆல்பட் ராஜ் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here