பொன்னேரி, ஆக. 30 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டு வரும் சுகாதார நிலைக்குறித்தும், மேலும்  மாணவர்களுக்காக அச்சமையலறையில் தயாரிக்கப்படும்  உணவின் தரம் குறித்து அவ்வுணவினை சுவைத்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவ்விடுதியில் மாணாக்கர்களுக்கு தேவையான போதிய குடிநீர் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டு உறுதிசெய்தார்.

மேலும் அங்குள்ள கழிவறைகள் சுகாதார அடிப்படையில் பராமரிக்கப்படுகிறதா ? என்பதை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவ்விடுதியில் உள்ள இருப்பு வருகையேடு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பார்வையிட்டார். தொடர்ந்து, அமைச்சர் விடுதியில் தங்கியுள்ள மாணவ – மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கயல்விழி அனைத்து விடுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பட்டியலில் கொடுக்கப்பட்ட உணவு முறையாக வழங்கப்படுகிறதா, இருப்பு பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா போன்ற பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் குறித்த பதிவேடு தொடர்ச்சியாக அவர்களின் வருகை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டதில் சில மாணவர்களுக்கு உதவி தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் அப்போது தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக உயர் நிலை அலுவலர்களிடம் ஆலோசிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆதிதிராவிடர் உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார். விடுதிகளில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு கல்வித்துறை மற்றும் காவல்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மாணவர்களிடம் கஞ்சா பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் அரசு விதிமுறைகளின்படியே ஆசிரியர்கள் நியமனங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சாதி, மதம் என்பதை பொறுத்தவரையில் தனிமனிதன் ஒவ்வொருவர் மனதிலும் மாற்றம் வர வேண்டும் எனவும், பல ஆண்டுகளாக ஊறிக்கிடக்கும் சாதிப்பிரச்சினையை படிப்படியாக தான் போக்க முடியும் என்றும், தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் அடுத்தவரை பார்க்கும் போது மனிதனாக மட்டுமே தெரிய வேண்டும் எனவும், மதம், சாதி, இனம் என பாகுபாடு கூடாது எனவும், ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் அடிப்படை மாற்றமே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்றும் அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.

மேலும் இவ்வாய்வின் போது அமைச்சருடன், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன்,மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், நகர செயலாளர்கள் பொன்னேரி ரவிக்குமார், மீஞ்சூர் தமிழ்உதயன், மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்ஸாண்டர்,உமாபதி,தீபன், நல்லசிவம், விடுதி காப்பாளர் அன்பரசு உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர். முன்னதாக திமுக கட்சியினர் மற்றும்அவ்வூர் மக்கள் சார்பில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பினை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here