திருவாரூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
சட்டவிரோதமாக தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் போது 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை கட்டணமாக கேட்டு பொதுமக்களிடம் வசூல் செய்த போதிலும், பல இடங்களில் முறையாக இனைப்புகள் இன்னும் வழங்கப்படாததால் கழிவு நீர் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும், மேலும் அதுக் குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு அவ்வப்போது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல இடங்களிலும் முறையாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறாத காரணத்தினால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்து ஓடும் அவல நிலையும் இருந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை திருவாரூர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுக்கும் வகையில் விதிகள் இயற்றப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகும் பாதாள சாக்கடை குழிக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்து வருகின்றனர். அதனால் அவ்வப்போது மனித உயிர் பலிகளும் ஏற்பட்டு வருவது என்பதில் மாற்றுக் கருத்தில்லையென அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடை தொட்டிகள் போன்றவைகளில் நைட்ரஜன் சல்பைடு என்ற விஷவாயு அதிக அளவில் இருப்பதால் கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்கள் விஷ வாயு தாக்கப்பட்டு உயிர் இழக்கின்றனர். அவ்வாறு இறந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் மனிதர்களை இறக்கி கழிவு நீர் தொட்டியில் அடைப்பு நீக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.
பல்வேறு நவீன இயந்திரங்கள் உள்ள போதும் அதனை பயன்படுத்தாமல், தற்போது வரை கழிவுநீர் தொட்டிகளில் அடைப்பை நீக்க மனிதர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரிலும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை குழிக்குள் மனிதர் ஒருவர் இறங்கி சுத்தம் செய்ய முயற்சித்து, அந்த முயற்சி பலனளிக்காததால் பாதாள சாக்கடை குழிக்குள் முழுவதுமாக மூழ்கி அங்கு ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி சரி செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசும் பொருளாகி உள்ளது.
பாதாள சாக்கடை குழிக்குள் மனிதர்கள் இறங்கக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி, நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி திருவாரூரில் பாதாள சாக்கடைக்குள் நபர் ஒருவரை இறக்கி சாக்கடையை சுத்தம் செய்யும் நகராட்சி நிர்வாகத்தின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



















