திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தீர்மானத்தின் பேரில் பொதுமக்களின் நலன் கருதி பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தவும் அந்த கட்டிடத்தின் அருகில் உள்ள பழைய வேளாண்மை அலுவலக கட்டிடத்தையும் எடுத்து அப்புறப்படுத்தவும் பொது நிதியிலிருந்து ரூ 8 லட்சத்து 38 ஆயிரம் நிதி வழங்கிட ஒப்புதல் கோரப்பட்டது.
காட்டாம்பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும் பசுந்தீவன பயிர் வளர்ப்பு மையத்திற்கு கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரைப்படி கம்பி வேலி அமைக்கவும் அதற்காகும் செலவை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளவும் மன்றத்தில் அங்கீகாரம் கோரப்பட்டது.
கன்னப்பந்தல் ஊராட்சியில் வேடியப்பன் கோவில் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் புதிய மின் மோட்டார் அமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். எனவே 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின் இணைப்புடன் கூடிய புதிய மின் மோட்டார் அமைக்கும் பணிக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள மன்றத்தில் அங்கீகாரம் கோரப்பட்டது.
திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவும் அதற்கான நிதியினை ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ளவும் அங்கீகாரம் கேட்கப்பட்டது
திருவண்ணாமலை ஒன்றியத்தில் தென்வடகிழக்கு பருவமழை காலப்பகுதி பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் வேங்கிக்கால், சேரியந்தல் மற்றும் கில்நாச்சிபட்டு ஊராட்சிகளில் உள்ள கால்வாய்களை தூர் வாரி தடையின்றி தண்ணீர் செல்வதை உறுதி செய்யும் வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அதற்கான செலவினத்தை ஒன்றிய பொது நிதியிலிருந்து மேற்கொள்ளவும் அங்கீகாரம் கேட்கப்பட்டது.
2021-22 ஆம் ஆண்டுக்கான 15 வது நிதிக்குழு மானிய பணிகளை கலந்து ஆலோசித்து தேர்வு செய்தல் என்பன உள்ளிட்ட 104 மன்ற பொருள்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு நிறை வேற்றப் பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒன்றிய உதவி பொறியாளர்கள் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் (பொது) ரவிசந்திரன் நன்றி கூறினார்.