கும்பகோணம், ஏப். 02 –
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்) சார்பில் போக்குவரத்து துறையை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூரிலிருந்து அய்யம்பெட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை இலவச நகர பேருந்து இயக்க வேண்டும், கும்பகோணம் முதல் திருவையாறு வரை காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்,
கும்பகோணம் முதல் அண்டக்குடி, மேல்புறம் வழியாக பாபநாசம் வரை நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பள்ளி நேரங்களில் மாணவ மாணவிகள் படும் துன்பங்களை எடுத்துக்கூறி, முழக்கங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், காவல் துறையினர், போக்குவரத்துத் துறையினர்கள், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லதுரை, மகளிரணி பொறுப்பாளர் கமலாம்பாள், நகர செயலாளர் கணேசன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செங்கதிர், அகில இந்திய இளைஞர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் செந்தமிழ் செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபு, செபஸ்டின், அனைத்து இந்தியப் பெண்கள் முன்னேற்ற கழகத்தினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்) மாவட்ட, ஒன்றிய, நகர,கிளை பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





















