சென்னை, நவ. 16 –
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியிலும் மிக அதிக அளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பாதிக்கப்படுள்ள பகுதிகளை மறு சீரமைப்பு செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ரூ. 300 கோடி அறிவித்துள்ளார்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்தும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழுவினை அமைத்து முதலமைச்சர் கடந்த நவ 11 ஆம் தேதி அன்று ஆணையிட்டார்.
அதன்படி இக்குழு உடனடியாக நவம்பர் 12 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற் கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற் கொண்டு பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
மேலும், முதலமைச்சர் நவம்பர் 13 அன்று டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர்கள் முதலமைச்சரிடம் சமர்பித்தனர். இக்குழுவின் அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
விரிவான ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சர் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை கார் சொர்ணவாரிப் பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும்,
நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரத்து 38 மதிப்பீட்டில் இடுப்பொருள்கள் வழங்கவும் உத்திரவிட்டுள்ளார்.
இடு பொருள்கள்
ரூ. 1485 மதிப்பிலான குறுகிய கால விதை நெல் 45 கிலோவை மறு சாகுபடி செய்திட வழங்கல்
ரூ.1235 மதிப்பிலான நுண்ணூட்ட உரம் 25 கிலோ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களில் மஞ்சள் நோயை தடுத்திடும் வகைக்காக வழங்கல்
ரூ. 354 மதிப்பிலான 60 கிலோ யூரியா தழைச்சத்து கிடைத்திட வழங்கல்
ரு. 2964 மதிப்பிலான டி.ஏ.பி. 125 கிலோ உரம் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைத்திட வழங்கல் ஆக மொத்தம் ரூ 6038 மதிப்பீட்டிலான நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.
மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ. 300 கோடி வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் குழுவின் தலைவர் அமைச்சர் இ.பெரியசாமி, குழுவின் உறுப்பினர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச்செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார்ஜயந்த், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.