கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பிரதமரை 29 பைசா மோடி என அழைத்தால் உதயநிதியை ‘டிரக்ஸ்’ உதயநிதி ஸ்டாலின் என பெயர் வைத்து அழைப்போம் என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினரோ அல்லது அவர்கள் கூட்டணியில் உள்ள திமுக கட்சியினரோ வெற்றி பெற்று எம்பி ஆனாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பார்லிமெண்டில் பெஞ்ச் தேய்த்தார்களோ அதே நிலைமைதான் மேலும் தொடரும். எனவும் அதைத்தான் நாங்கள் மக்களுக்கு உரக்கச் சொல்கிறோம் தயவு செய்து உங்கள் வாக்கை வீணாக்காமல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்து மத்தியில் பிரதமராக ஆகப்போகும் மோடியிடம் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் தூதுவர்களாக மாற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் தான்தான் இந்தியாவின் வழிகாட்டி என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் செல்வாக்கு இல்லாத நீங்கள் இந்தியாவிற்கான வழிகாட்டிபோல் பேசுவது நகைப்புக்குரிய விஷயம் எனவும், மேலும் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முகஸ்டாலின் என அப்போது அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் அவருடைய பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி, மத்திய அரசு இதைத்தாண்டி வேறு அரசியலே இல்லை என்பதுதான் இப்போது அவர்களுடைய நிலைமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை என சொல்லி விட்டு ஒவ்வொரு நாளும் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை வைத்து மட்டுமே அரசியல் செய்கின்றனர் எனவும் மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் வழங்கவில்லை என்ற புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டு தமிழ்நாட்டை சுற்றிக்கொண்டு வலம் வருகின்றனர்.
இந்த நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்பதும், நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்பதும் பாஜகவின் கொள்கை. அது கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறோம். ஆனால், பிரதமர் மோடி இருந்தவரை காவிரி நீர் பிரச்சினையை எளிதாகவும், ஒத்துழைப்பு சார்ந்த விஷயமாகவும் வைத்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்புதான் காவிரி நீரை தரமாட்டேன் என அவர்கள் சொல்வதும் இங்குள்ள அவர்களுடைய கூட்டணி கட்சியினர் பதிலளிக்காமல் ஏமாற்றி வரும் கூட்டணியாக இருந்து வருகிறது என அப்போது குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடியை விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது எனவும் மேலும் நீங்கள் பிரதமர் மோடிக்கு ’29’ பைசா என பெயர் வைத்து அழைத்தால் உங்களை ‘ட்ரக்ஸ்’ உதயநிதி ஸ்டாலின் என அழைப்போம் என்று அப்போது காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மக்கள் நல திட்டங்களாக திருப்பி செலுத்துகிறது. தகுதி வாய்ந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக வழங்குகிறார். உங்களுடைய கை வழியாக செல்லவில்லை என்பதற்காக பிரதமரை 29 பைசா என கேவலப்படுத்தினால், அத்தனை போதை கடத்தல் கும்பலையும் உடன் சேர்த்து வைத்துள்ள உங்களை ‘ட்ரக்ஸ்’ உதயநிதி என அழைப்போம், எங்களுக்கும் பெயர் வைக்க தெரியும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.






















