கும்பகோணம், ஏப். 26 –
கும்பகோணத்தில் கோட்டாட்சியர் லதா தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வராமல் அலட்சியப் படுத்தியதால் விவசாயிகள் ஆத்திரமடைந்து கூட்டத்தில் இருந்து அரசு அலுவலர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கிய, கும்பகோணம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கோட்டாட்சியர் லதா தலைமையிலும், வட்டாட்சியர் தங்க பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது
இக்கூட்டத்தில் கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய 3 வட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர், இக்கூட்டத்தில் கூடுதல் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், ரசாயண உரத்தட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும், எந்தவித பாரபட்சமின்றி தேவையான அனைத்து இடங்களிலும் தூர்வாரும் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகள் தங்களது கோரிக்கை, இடர்பாடுகள் குறித்து பேசினர், ஆனால் அதற்குதக்க பதில் பெறவும் நினைத்திருந்தனர் ஆனால் விவசாயிகளின் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டிய சம்மந்தப்பட்ட வேளாண்துறை, தோட்டக்கலை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக வரவில்லை, இதானல் ஆத்திரம் அடைந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அரசு அலுவலர்கள், விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாகவும், விவசாயிகளின் குறைதீர்ப்பதற்கான கூட்டத்திற்கு அரசு அலுவலர்களே வராமல் இருந்தால் விவசாயிகளின் குறைகளுக்கு யார் பதில் அளிப்பார்கள் என கேள்வி எழுப்பியதுடன், கூட்டத்தில் இருந்து அரசுத்துறை அலுவலர்களுக்கு எதிராக கண்டன முழங்களை எழுப்பியபடி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இதனால் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதற்கிடையே கோட்டாட்சியர் லதா, இன்னும் சிறிது நேரத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கூட்டத்திற்கு வந்து விடுவார்கள் வந்தவுடன் கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார், இதற்கு ஒருவாரத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட இக்கூட்டத்திற்கு அரசு அலுவலர்கள் வரத்தவறினால், கோட்டாட்சியர் மேஜை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்தனர்.




















