திருவள்ளூர், அக். 03 –

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காக்களூர் ஊராட்சிமன்ற தலைவர் ஆர்.சுபத்ரா தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்பொழுது ஆட்சியர் தெரிவித்ததாவது :

பொதுமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எளிதில் முடிக்க வேண்டியதை உடனடியாகவும், ஒரு சில பிரச்சனைகளுக்கு திட்டமிட்டு படிப்படியாக நிவர்த்தி செய்யவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும்.தமிழ்நாடு பொறுத்த வரை கொரோனா தொற்று குறைந்திருந்தாலும் தகுதியுள்ள அனைவரும் 100 சதவிகிதம் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 17,000 மக்கள் தொகை கொண்ட காக்களூர் ஊராட்சியில் 98 சதவிகிதம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட வடிகால் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை, ஊரக வளாச்சித்துறை, நகராட்சி, வருவாய்த்துறை ஆகிய துறைகள் மூலம் ஒரு குழு அமைத்து, வாரந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் அனைத்தும் உரிய முறையில் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.

 அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பொது நிதி செலவினம், கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் முன்னேற்றம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட 34 பொருண்மைகளில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை ஏற்று அனைத்து தீர்மானங்களும் ஒருமானதாக ஏற்கப்பட்டன.

மேலும் ஊராட்சியில் உள்ள பொது பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் அளித்த கோரிக்கைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் மல்லிகா, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.காந்திமதி நாதன், ஆர்.வெங்கடேசன், திருவள்ளூர்  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் எத்திராஜ், பூவண்ணன், காக்களூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.எஸ்.சிவராம கிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here