காஞ்சிபுரம், ஆக. 07 –
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் – சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் – தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் போது, சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது. உடனே, சுசித்ரா மற்றும் வீட்டில் இருந்த அனைவரும் வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறினர். பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அணைத்தனர். திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் வீட்டில் இருந்த பாத்திரங்கள், மெத்தை, சோஃபா, ஆடைகள், பணம் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமானது. தீயினை உடனே அணைத்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
இத்தகவலறிந்து உடனடியாக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அப்பகுதிக்கு விரைந்து சென்று வீட்டில் வசித்தவர்களிடம் நலம் விசாரித்தும், தீ விபத்து குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், தீ விபத்தில் பொருட்களை இழந்த குடும்பத்தினர்க்கு அரிசி, பொருட்கள், பாய், போர்வை மற்றும் பணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை க.சுந்தர் குடும்பத்தினருக்கு வழங்கினார்.