பட்டுக்கோட்டை, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை அதிர வைக்கும் வகையில் தாயே நாடியம்மா என்றவாறு பயபக்தியுடன் முழக்கம் எழுப்பி அத்திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது.
முன்னதாக செண்டை மேளம் முழங்க தேரடித் தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரிரோடு, பிள்ளையார்கோயில் தெரு வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது அவர்கள் மனமுருகி பயபக்தியுன் தாயே நாடியம்மா என்று விண்ணதிர கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையான இன்று பெரியதெருவில் நிறுத்தப்பட்ட தேர் மீண்டும் புறப்பட்டு பெரியதெரு, மணிக்கூண்டு, தலையாரிதெரு வழியாக தேரடித்தெருவில் உள்ள தேரடிக்கு தேர் நிலையை அடைய உள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐகள் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.






















