தஞ்சாவூர், ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும் அவர்கள் பறவைகளுக்கு தீவனம் கொடுத்து விளையாடி மகிழ்ந்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவில் அருகில் ராஜாளி பறவைகள் பூங்கா அமைந்துள்ளது.
அர்ஜென்டினா நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 25 நாடுகளை சேர்ந்த வாத்து. முயல், நாய். காதல் பறவை, ராஜாளி என ஆயிரக்கணக்கான பறவைகள் அப்பூங்காவில் உள்ளது.
மேலும் கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பறவைகள் பூங்காவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அங்கு வாத்துகள் ஒன்றோடு ஒன்று முத்தமிட்டு, தண்ணீர் தொட்டியில் ஆனந்த குளியல் போட்ட காட்சிகளை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
கூண்டுக்குள் பறவைகள் கூட்டமாக வட்டமிட்டு சுற்றி பறந்தது காண்போரின் கண்களுக்கு விருந்தாகவும், பறவைகளின் சத்தங்கள் காதுகளுக்கு இனிமையாகவும் இருந்தது.
சுற்றுலா பயணிகள் கைகளில் இருந்த தீவனத்தை கண்டதும் வண்ண காதல் பறவைகள் (Love Birds) பறந்து வந்து அவர்கள் கைகளில் அமர்ந்து தீவனம் சாப்பிட்டது மிகுந்த வியப்பை அளித்தது.
சிறு குழந்தைகள் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை முயல்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். முயல் குட்டிகள் சிறுவர்களுடன் ஓடி விளையாடியது குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு முயல் வாயில் இருந்த உணவை மற்றொரு முயல் கல்வி சாப்பிட்டது ரம்யமாக இருந்தது.
ராஜாளி பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருத்தர் கையிலும் தோலிலும் அமர்ந்து அவர்களோடு கொஞ்சி விளையாடியது. அவர்கள் கொடுத்த தீவனத்தை சாப்பிட்டு பல நாள் நண்பர்கள் போல் நெருக்கமாக பழகியது இவற்றை சுற்றுலா பயணிகள் செல்ஃபியும், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.