கும்பகோணம், ஆக. 17 –
கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமநல்லூரைச் சேர்ந்த 33 வயது வாலிபர் மணிகண்டன் இவர் கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வியுற்றதால் விரக்தியில் நேற்றிரவு தனது வீட்டின் மாடி அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவ்விபத்துக் குறித்து திருவிடைமருதூர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலுவின் மகன் மணிகண்டன் (33), இவர் எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவர் கல்லூரி பேராசிரியர் பணிக்காக முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் அப்பணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநில அரசின் தகுதி தேர்வு எழுதியுள்ளார். அதற்கான தேர்வு முடிவு கடந்த மாதம் (ஜூலை) அறிவிக்கப்பட்டது. இதில் 5 மதிப்பெண் குறைவாக பெற்று இவர் தோல்வி அடைந்துள்ளார்.
மேலும் இத்தேர்வில் இவரை விட சுமாராக படித்த பலர் வெற்றி பெற்றதும், மேலும் நிரந்தரமான நல்ல பணி இல்லாததாலும், இதனால் திருமணமும் நடைப்பெறாமல் காலம் கடந்து செல்வது போன்ற பிரச்சினைகளால் இவருக்கு பெரும் மன அழுத்தத்தையும் மற்றும் கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தவுள்ளது. இதனால் கடந்த சில வாரமாக மணிகண்டன் எதிலும் பிடிப்பில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு அவரது குடும்பத்தினர் வீட்டின் கீழே இருக்க, மணிகண்டன் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று, கதவை உட்புறமாக தாளிட்டுக் கொண்டு, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீயிட்டுவுள்ளார். வீட்டின் மாடியில் இருந்து புகை வருவது கண்டும், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டும், அவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டினரும், திடுக்கிட்டு மாடிக்கு சென்று பார்த்த போது, மணிகண்டன், உட்புறமாக தாளிடப்பட்ட அறைக்குள், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவிடைமருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சாதிக், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தேப்பெருமாநல்லூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மணிகண்டன் இதற்கு முன்பு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓராண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் இவருக்கு ஒரு மூத்த சகோதரர் மற்றும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்பது குறிப்பிடதக்கது.