கும்பகோணம், ஆக. 14 –
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் 7 மாடிகள் கொண்ட வணிக கட்டடமாகும். மேலும் இத்துணிக்கடையில் 500 – க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் விடுமுறையான ஞாயிறு தினம் என்பதாலும் மற்றும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததால் அவ்வங்காடிக்கு துணிகள் வாங்குவதற்காக அங்கு வந்திருந்தனர்.
அப்போது சுமார் இரவு 7 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முகப்பு பகுதியில் புகை எழும்பியது. சாலையில் நின்றவர்கள் நிறுவன ஊழியரிடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, கடை ஊழியர்கள் மற்றும் உள்ளே இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு அந் நிறுவன வணிக கட்டடத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு சென்றனர்.
உடனடியாக கடை ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அத்தகவலறிந்து தீயணைப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனத்துடன் வந்தனர். உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அத்தீயினைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விபத்துக்கானகாரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் மின்சாதன்ங்களில் ஏற்பட்ட மின் கசிவால் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களில் தீப்பொறி பட்டு மளமளவென தீ பரவியுள்ளது எனவும், இருப்பினும் அடுத்தடுத்த விசாரணைகளில் முழுமையான தகவல் தெரிய வரும் எனவும் முதற்கட்ட விசாரணைக்கு பின்பு காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இத் தீ விபத்தில் சுமார் 50 அடி உயரத்திற்கு மள மளவென தீ பரவியதால், அப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலாமக காட்சியளித்தது. அதனால் அப்பகுதியில் அத் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரின் விசாரணையில் தற்போது வரை எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லையெனவும், பொருள் சேதம் குறித்து முழுமையான விசாரணைக்கு பின்பே தெரியவரும் தகவல் தெரிவிக்கிறது.






















