இன்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் நடைப்பெறும் 5 வது வார தொடர் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.
திருவேற்காடு, அக். 10 –
தமிழக அரசு கொரோனாவைக் கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெகா சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி அதன் மூலம் கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது.
இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த செப் – 12 தொடங்கி 19,26, லிலும் அக் – 3 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் தொடர்ச்சியாக 5 வாரங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனையின்படி, இன்று ( அக்-10 ) திருவேற்காடு நகராட்சி பகுதிக்கு உட்பட்ட 20 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி அலுவலக வளாகம், பஸ் நிலையம் மற்றும் உதவும் கரங்கள் அயனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடக்கும் தடுப்பூசி முகாம்களை தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பயனாளிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி போடப்படுகிறது. போதுமான தடுப்பூசி கையிருப்பு உள்ளதா, முறையாக பரிசோதனை செய்து தடுப்பூசி செலுத்தப்படுகிறதா, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றதா என்பது குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து தடுப்பூசி முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் எத்தனையாவது டோஸ் என்ற விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.