திருவண்ணாமலை, அக்.10-
திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 612 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் பலரும் அரசு பள்ளிகளை தேடி வரும் நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள 152 பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்த்து முதலிடத்தை பிடித்திருக்கிறது.
திருவண்ணாமலை டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளி. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் தற்போது 344 மாணவர்கள் மற்றும் 268 மாணவிகள் உள்பட 612 பேர் படிக்கின்றனர். நடப்பு கல்வியாண்டில் மட்டும் 208 மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புளும் ஆங்கில வழி கல்வி முறைக்கு மாற்றப்பட்டுள்ளது இது பொதுமக்களிடையே கூடுதல் வரவேற்பு பெற்றுள்ளது.
ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான ஆங்கில வழிக்கல்வியை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவசமாக பெறும் நிலை உருவாக்கியுள்ளது. அதனால் தொடர்ந்து இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஒன்றிய அளவில் அதிக மாணவர்களை சேர்த்து சாதனை படைத்த டவுன் ஹால் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் வேதபிரகாஷ், வட்டார கல்வி அலுவலர் ஜோதி ஆகியோர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.
அதையட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் டெய்சி ராணி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் அருண் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி மாவட்டக் கல்வி அலுவலர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் மாணவர்களை கவரும் வகையில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளதையும் கம்ப்யூட்டர் லேப் நூலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகள் செய்திருப்பதையும் மாவட்ட கல்வி அலுவலர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது பள்ளி துணை ஆய்வாளர் குமார், வடடார வள மைய மேற் பார்வையாளர் சின்னராஜ், ஆசிரியர் பயிற்றுநர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.