ஆவடி, மே. 22 –
ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த இந்த திருக்கோவில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத இருதயாலீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வேனிற்காலம் வசந்த உற்சவம் பஞ்சமூர்த்திகள் வீதி உலா என தொடர்ந்து மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் கோவில் தர்மகர்த்தா தேவகோட்டை பி, எஸ், எஸ், எஸ், எஸ், எஸ்., சோமசுந்தரம் செட்டியார் குடும்பத்தினர்கள் தலைமையில் இந்த வேனிற்கால வசந்த உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.
இதில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பிரம்மாண்ட அலங்காரத்தில்வீதி உலா நடைபெற்றது. இதன் முக்கிய விழாவான பஞ்சமூர்த்தி வீதி உலா நேற்று மாலை ஆறு மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு இரவு 10 மணிக்கு மேல் தொடங்கியது.
இதில் விநாயகர், ஸ்ரீ இருதயாலீஸ்வரர் ஸ்வாமி, மரகதாம்பிகை , வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கும் சிறப்பு மலர்கள் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
மேலும் மிகச் சிறப்பாக பிரம்மாண்ட ரிஷப வாகனத்தில் இருதயாலீஸ்வரர் ஸ்வாமியும் மரகதாம்பிகை தாயாரும் மலர்களாலும் மின் விளக்குகளாலும், அலங்கரித்து பஞ்சமூர்த்திகளும் மேளதாளம் முழங்க , வாணவேடிக்கையுடன் நான்கு வீதி, மண்டபத் தெரு மேட்டுத்தெரு, கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர், அனைத்து தெருக்களிலும் உள்ள பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பரவசத்துடன் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சுவாமியை உற்சாகத்தோடு வழிபட்டனர்.
இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த வீதி உலா இன்று அதிகாலை 5 மணி அளவில் பஞ்ச மூர்த்திகளும் கோவிலை வந்தடையும், இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வேனிற்கால வசந்த உற்சவ சுவாமிகளை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு அதிகார நந்தி அலங்காரத்துடன் வேனிற்கால வசந்த உற்சவம் நிறைவு பெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.






















