பாபநாசம், மே. 12 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்கு உட்பட்ட தேவராயன் பேட்டை குடமுட்டி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தேவராயன் பேட்டை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நீர்வளத்துறை மாவட்ட செயற்பொறியாளர் ஆனந்த் ஆகியோர் நடைப்பெற்று வரும் அப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அவ்வாய்வின் போது, அரசு வகுத்திட்ட திட்டப்படி அப்பணிகள் நடைப்பெற்று வருகிறதா என்றவாறு, தூர்வாரப்பட்ட வாய்க்கால்களை அளவீடு செய்தனர். மேலும் அப்பணிகளின் தரம் குறித்து, அப்பகுதி விவசாயிகளிடம் கருத்துக்கேட்கப்பட்டு வருவதாகவும், இம்மாவட்டத்தில் நடைப்பெறும் இப்பணிகளுக்காக 240 – க்கும் மேற்பட்ட பொக்லைன்களை பயன் படுத்த திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும் இப்பணிகள் குறித்து , நீர்வளத்துறை மாவட்ட செயற் பொறியாளர் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டு, தற்போது, 189 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 1046 கிலோ மீட்டர் அளவில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது எனவும், மேலும் சமீபத்தில் பெய்த மழையின் காரணத்தால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால், பணிகள் தொய்வடைந்தாலும் இந்த மாத இறுதிக்குள் தூர்வாரும் இப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இத்திட்டப்பணிகள் குறித்த திட்ட மதிப்பீடு மற்றும் வரைப்பட மேப் பலகை அப்பகுதிகளில் வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தினசரி நடைப்பெறும் பணிகளின் அளவு மற்றும் முடிவடைந்த பணிகள் குறித்த தகவல்களை அரசு துறைச் சார்ந்த ஆஃப்பில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், பணிகளின் தரம் குறித்தும் தினசரி கண்காணிக்கப்படுவதாவும் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.























