திருவண்ணாமலை, அக்.9-

திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக திருவண்ணாமலை அடுத்த கண்ணமடையான் வனப்பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் நேரில் ஆய்வுச் செய்தார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை 89 கிலோ மீட்டர் தூரம், ஏற்கனவே உள்ள 7 மீட்டர் அகலமுள்ள சாலையை தற்போது 10 மீட்டராக அகலப்படுத்தி குறைந்த நேரத்தில் விரைவாகச் செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் பழனிவேல், கோட்டப் பொறியாளர் முரளி ஆகியோருடன் அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல ஏற்கனவே திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வழியாக உளுந்தூர்பேட்டைச் சென்று திருச்சிக்குச் செல்ல அதிக நேரம் ஆவதால் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு குறைந்த நேரத்தில் விரைவாக கடந்து செல்ல இருவழிச் சாலை அமைத்தால் முழுமையானதாக இருக்கும் என்பதால் தற்போது ஆய்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, வருகிற ஆண்டிற்குள் சாலை அமைக்கும் பணி நடைபெறும்.
தற்போதுள்ள மக்கள் தொகை, போக்குவரத்து அடிப்படையில் சாலை விரிவாக்கம் என்பது அத்தியாவசியமாக உள்ளது. சாலை விரிவாக்கத்தின் போது மரம் வெட்டுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நடுவதே நெடுஞ்சாலைத் துறையின் நோக்கம். சாலையின் விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டுவது நெடுஞ்சாலைத் துறையின் ஆசையோ, நோக்கமோ இல்லை. மக்களின் நலன் கருதியே நெடுஞ்சாலைத் துறை செயல்படுகிறது.

கொரோனா தொற்றினால் வாரத்தில் 3 நாட்கள் கோவில்கள் அனைத்தும் மூடப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுமிடத்தில், கொரோனோ பெருந்தொற்று பரவாமல் தடுப்பது அரசின் கடமையாகும். அரசியல் செய்வதற்காக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். இந்து மக்களுக்கும், ஆன்மீகப் பெருமக்களும் மிக நெருக்கமான அரசு தி.மு.க. அரசு. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது திருவண்ணாமலை முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க. மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், பொதுக்குழு உறுப்பினர் ப்ரியா ப.விஜயரங்கன் உள்பட பலர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here