கும்பகோணம், ஏப். 07 –
கும்பகோணம் அருகாமையுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவல் கிராமத்தில் வடுக பைரவத்தலமாக போற்றப்படும் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஊழி காலத்திலும் அழியாத இத்தலம் கிருதயுகத்தில் பில்வனம் (வில்வம்) என்றும், திரேதாயுகத்தில் சமீவனம் (வன்னி) என்றும், துவாபரயுகத்தில் பிப்பலவனம் (அரசு) என்றும் கலியுகத்தில் வேத்ரவனம் (பிரம்பு) என்றும் திகழ்கிறது.
இத்தல இறைவனை மூன்று கோடி மந்திர தேவதைகளும், பிரமன், எமன் முதலான தேவர்களும், துர்வாசர், அகத்தியர் முதலான முனிவர்களும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தில் இறைவன் ஆணைக்கு இணங்க, நந்தியம்பெருமான் கொம்புகளால் உண்டாக்கப்பட்ட சிருங்கோத்பவ தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இத்தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபடுவோருக்கு எம பயம் கிடையாது, பிதுர் சாபம் நீங்கும், புத்திரபேறு கிட்டும், மனக்கவலை அகலும், குடும்ப நலம் பெருகும் என ஐதீகம்.
துர்வாச முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தல அம்பிகை திருமாலாக காட்சியளித்ததாக வரலாறு, இங்கு காவிரி நதி உத்தரவாஹி நதியாக (வடகாவேரியாக) பாய்ந்தோடும் பெருமை கொண்டது இத்தலம். மேலும் இங்கு அகத்திய முனிவரால் காவிரி மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கரையேற்று விநாயகர் அருள்பாலிக்கிறார்.
கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் எழுப்பப்பட்ட முதற் கற்கோயில் இதுவாகும், இங்கு துர்வாச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வடுக பைரவரை வழிபடுவோர் வறுமை நீங்கி, செல்வம் பெருகும், வழக்குகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும் இத்தலத்தை போற்றி, திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடியுள்ளனர் இத்தகைய பெருமை கொண்ட இத்தலத்தில் நூறு ஆண்டுகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு முதன் முறையாக சித்திரை பிரமோற்சவம் மீண்டும் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டின் சித்திரை பிரமோற்சவ தொடக்கமாக, இன்று உற்சவர் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான், திருக்கோடீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் கொடிமரம் அருகே எழுந்தருள, நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, கொடிமரத்திற்கு பலவிதமான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் நடந்த பின்னர் நந்தியம்பெருமான் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது, தொடர்ந்து கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்து, 16 விதமான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு, பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் புருஷாமிருகம், காமதேனு, பூதம், பூதகி, யானை அன்னபட்சி, கைலாச, சிம்ம, குதிரை, ரிஷப வாகனம் என பல்வேறு விதமான வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவிற்கு பதிலாக, பிரகார உலாவாக நடைபெறுகிறது முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 13ம் தேதி புதன்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டமும், 16ம் தேதி சனிக்கிழமை சிருங்கோத்பவ புஷ்கரணியில் சித்திரை தீர்த்தவாரியும் 17ம் தேதி ஞாயிறு மாலை தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது பின்னர் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை சுத்தாபிஷேகம் மற்றும் ஆஸ்தான பிரவேசத்துடன் இவ்வாண்டிற்காண சித்திரை பிரமோற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது.