தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் கடந்த 2022 ஆண்டு சப்பர தேரோட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த நிலையில் மிகுந்த பாதுகாப்போடு 96-வது ஆண்டாக அப்பர் சதய விழா சப்பர தேர் விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சமய குறவரான அப்பர் சுவாமிக்கு மடம் அமைத்து, அவரது பிறந்தநாளை கிராம மக்கள் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது, ஏற்பட்ட எதிர்பாராத வகையில் மின்கம்பி தேர்மீது உரசியதில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு பிறகு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தமிழம் முழுவதும் திருவிழா நடத்தும்போது கடைபிடிக்க உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த விபத்து நிகழ்ந்த பின்னர் கடந்தாண்டு, 11 பேர் இறந்த சுவட்டின் தாக்கம் இருந்ததால், களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதயவிழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது.
இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பிலும் அப்பர் பேரவை சார்பிலும் 96 -வது ஆண்டாக அப்பர் அப்பர் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதற்காக கடந்த முறைகளை விட சிறியதாக சப்பரம் வடிவமைக்கப்பட்டு மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு களிமேடு கிராமத்தில் வீதி உலா நடைபெற்றது. அதில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் நிறுத்தப்பட்டது.





















