திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை, ஆக 1 –
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி உள்ளிட்டவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 1340 ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு ஏற்கனவே இது தொடர்பான நோட்டீஸ் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி பெரும்பாலானோர் தங்களுடைய ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை அய்யங்குளத்தெருவிலுள்ள பன் கேக் தயார் செய்யும் பேக்டரி குடோன்களில் உரிமையாளர் உள்பட 4 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த குடோனில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென்று கடந்த 7 நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவபாலன், கலைஷ்குமார், சுப்பிரமணி, நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில்சிட்காயராஜா, துறை அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் பேக்கரி பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரி குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே பேக்கிரியை திறக்கலாம் என்றும் மாவட்டத்தில் 50 சதவிதம் மேல் கடைகளில் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடைக்காரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் இது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.