மீஞ்சூர், ஜூலை. 06 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அவர் பணிகள் விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.

மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் அனல்மின் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே, வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் 3 வது நிலையின் கட்டுமான பணிகள் தற்போது, 8327 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிகபட்ச மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல்மின் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இப்பணிகளை மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்து, கொதிகலன் குழாய் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் அமைச்சர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனல்மின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம் பவர்பாயிண்ட் மூலம் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தெரிவிக்கும் போது, நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதன் பேரில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் 3 ஆம் நிலைய திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எந்தெந்த பிரிவுகளில் தொய்வு ஏற்பட்டு திட்டப் பணிகள் தாமதமாகிறது என்பது கண்டறியப்பட்டு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் மாதத்திற்குள் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

அனல்மின் நிலையத்தில் நிலக்கரி மாயம் தொடர்பாக அறிக்கையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது தெரிவித்தார். இவ்வாய்வின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here